12 நவம்பர், 2013

கற்பிழந்த கண்ணகியின் கண்ணீர் வாக்குமூலம்

பாரதி சொன்ன 
புதுமைப் பெண்ணாக 
புத்வேகத்துடன் 
புறப்பட்டு வந்தவள் நான்தான்

கலிகாலத்தில் - ஒரு 
கண்ணகியாக வாழ 
கங்கணம் கட்டிக்கொண்டு 
கம்பீரமாய் நின்றவள் நான்தான்

சீதையாய்
சிறைபிடிக்கப்பட்டேன் - ஆனால்
சீதையாய்
சிறை யெடுக்கப்படவில்லை

சிறைப்பட்டும்
சிதைபடாத சீதையல்ல நான்
சிறைக்குள்ளே
சிதைபட்ட பேதை நான்

வெளியுலகிற்கு
வெளிச்சம் போட்டு
வெட்கி போகாமல்
வெள்ளேந்தியாயிருந்தேன்

கண்ணகிகள்
கற்பிழக்கும்
கட்டாயக் காலம்
கட்டவிழ்த்து விடப்பட்டது

சீதைகள்
சீரழிய வேண்டிய
சிக்கலுக்குள்
சிக்கிக்கொண்டார்கள்

வலிகள் நிறைந்த
வலுவான வாழ்க்கைக்குள்
வலிந்து தள்ளும்
வழிகள் வகுக்கப்பட்டன

வழிகள் இல்லாததால்
வலுவும் இல்லாத நான்
வலிந்து தள்ளப்பட்டேன்
வசப்படுத்தும் வக்கிரத்திற்குள்

சூழ்நிலைகள்
சூழ்ந்துகொண்டு சூறையாடும்
சூழ்ச்சிகள் சூடுபிடித்ததால்
சூல் வர்த்தகம் -என்
சூட்சமமானது

எண் சாண் உடம்புக்கு
ஒரு சாண் தலை பிரதானம் -எம்
ஒரு சாண் வயிற்றுக்கு
எண் சாண்உடம்பே பிரதானமானது

நாயங்கள்
படுத்து கொண்டதால்
நானும்
படுத்து கொண்டேன்

எங்கள்
வயிற்று பசிக்கு
விருந்திடுவதற்கு
நான் பலருக்கு விருந்தானேன்

எங்களை தாங்க
யாருமில்லை என்பதால்
நான் பலரை தாங்கும் நிலை

எங்களுக்கு துணை
யாருமில்லை என்பதால்
நான்தனியாக தூங்குவதில்லை

இராமனின்
அக்கினி பிரவேச ஆணை
அர்த்தமுள்ளதாகும்
இனி வரும் காலமெல்லாம்

கவலை தீர்க்க
கண்ணீர் இல்லை என்னிடம்
கருணை இல்லை கடவுளிடமும்

அழுது அழுது
அழகை குறைக்க முடியாது
அடுத்த வேலை அழைப்பதால்
அவசரமாய் போய்வருகிறேன்

கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்