18 மே, 2013

தவறான எண்ணில் கடவுள் ( நான் வாசித்த ஓர் அழகான கவிதை )

தற்செயலாக ஒருநாள் தொலைபேசியில்
தவறான எண்ணில் கடவுள் சிக்கினான்.

அடக்கி வைத்திருந்த கேள்விகள்
அத்தனையும் கேட்க ஆரம்பித்தேன். 

இங்கே என்ன நடக்கிறது என்று பார் 

உனக்கு வீடு கட்டுவதற்காகவே 
உன் வீட்டை இடிக்கும் மூடர்கள்!

இடிக்கப்படுவதில்
     நீ இடிக்கப்படுகிறாயா?

கட்டப்படுவதில்
     நீ கட்டப்படுகிறாயா?

இந்த ராம் யார்? ரஹீம் யார்?

பெயரில் என்ன இருக்கிறது ?
பெயரால் அல்லவா இத்தனை பிரச்சனைகள்!
பெயர்களில் நீ இருக்கிறாயா?

நீ அன்பு என்றால்
     இந்த பகை யார் ?

நீ சாந்தி என்றால்
     இந்த வெறி யார் ?

நீ சமத்துவம் என்றால்
     இந்த துவேசம் யார் ?

நீ ஆனந்தம் என்றால்
     இந்த துயரம் யார் ?

நீ உண்மை என்றால்
     இந்த பொய் யார் ?

நீ ஒளி என்றால்
     இந்த இருள் யார் ?

எரியும் வீடுகள்
     உன் தீபாராதனையா ?

வெட்டப்படும் வெண்புறாக்கள்
     உனக்கு அர்ச்சனையா ?

சிந்தும் ரத்தம்
        உனக்கு அபிசேகமா ?

இது எந்த மதம் ? எந்த வேதம் ?
       இவர்களா உன் பக்தர்கள் ?

ஆலய மணி ஓசையும்
          மசூதியின் அழைப்பொலியும்
காற்றில் கரைந்து சங்கமிக்கும் அர்த்தம்
          இந்த மூடர்களுக்கு எப்போது புரியும் 

கடைசியாக கேட்கிறேன்
நீ ஹிந்துவா? முஸ்லிமா?

" ராங் நம்பர் " என்ற பதிலோடு
  இணைப்பு துண்டிக்கப்பட்டது.

                                                            - அப்துல் ரஹ்மான் -

கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்