28 செப்டம்பர், 2013

அந்நியதேசமும் எம்மவர் அவலவாழ்க்கையும்

அன்னை பூமியைவிட்டு 
அந்நியதேசம் வந்தோம்
ஆனந்த வாழ்க்கையென்று 
அவஸ்தையில் வாழ்கின்றோம் 

தவங்கள் செய்து 
சாபங்கள் பெற்றோம் 
யுகங்கள் தோறும் 
பாவங்கள் சுமக்கின்றோம் 

சொர்க்கம்விட்டு சொர்க்கம்தேடி 
நரகம் வந்தோம் 
தூக்கம்விற்று துக்கம்வாங்கி
ஏங்கி நிற்கின்றோம் 

ஆயிரம் கனவுகளோடு வந்த நாம் 
தூக்கத்தை இழந்தோம் 
ஆயிரம் ஆசைகளோடு வந்த நாம் 
பாஷையை மறந்தோம் 


யுத்தம் இங்கே இல்லை 
இரத்தம் இங்கே இல்லை -ஆனால்
நித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம் 

ஓடியோடி அலைகிறோம்
ஓய்வென்பது இல்லை 
தேடித்தேடி தொலைகிறோம்
தேடல் முடியவும் இல்லை 

ஆயுதப்போரில் 
தப்பிக்கொண்ட நாம் 
வாழ்க்கைப்போரில் 
மாட்டிக்கொண்டோம் 

பணம்மீது மோகம்கொண்டு 
மனங்கள் இங்கே சாகிறது 
சுயநலங்கள் ஓங்கிக்கொள்ள
பொதுநலங்கள் பொசுங்குகிறது 

காலைவாரும் உலகத்திலே 
காலடி வைத்தோம் 
தோளைக்கொடுத்து தூக்கினால் 
தலைமேல் காலால் மிதிக்கிறார்கள் 


பண்பு பண்பாடெல்லாம் 
பாடையில் ஏறுகிறது 
மாண்பு மனிதமெல்லாம் 
மடிந்து போகிறது 

உள்ளக்கிடங்கில் உணர்வுகள் 
புதைந்து போகிறது 
உயிரில் கலந்த தாய்மொழியும் 
சிதைந்து போகிறது 

ஆசையெல்லாம் பூட்டி 
சாவியை தொலைத்துவிட்டோம் 
ஆடைபூண்ட ஆண்டியாய் 
அவணியில் வாழ்கின்றோம் 

சுற்றும் முற்றும் பார்த்தால் 
சுத்தம் எதுவும் இல்லை 
புத்தன் பெற்ற ஞானம் 
சித்தம் அடைகிறது 


சுற்றும் பூமியின் வேகத்தை 
விஞ்சுது எங்கள் வேகம் 
சுற்றம் கலந்து சிந்திக்க 
சற்றும் இல்லை நேரம் 

புத்தம் புதிதாய் 
மாறுது பூமி 
சித்தம் கலங்கிய பித்தனாய் 
ஆகிறான் மனிதன் 

ஓய்யாரவாழ்க்கை வாழ்ந்தவரெல்லாம் 
ஒற்றை அறைக்குள்ளே 
ஒருவரையொருவர் பார்க்காமல் 
குடும்பம் நடத்தினம் 

அவலம் எங்கள் வாழ்வை 
குத்தகைக்கு எடுத்துக்கொண்டது 
ஆயுள் முழுவதும் தொடர்வதாக 
ஒப்பந்தமும் போட்டது 

அகதியாய் நாம் வாழவேண்டுமென்பது 
உலக நியதியானது 
அணுஅணுவாய் சாகவேண்டுமென்பது 
ஆண்டவன் நீதியானது 

தாய்த் திருநாடே உன் மடியில் 
மடியும் காலமாவது வந்திடுமா ?


 



2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உண்மையாக ஒரு அகதி படும் இன்னல்களை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது... உன்மையிலே நன்றாக இருக்கின்றது துவா.. வாழ்த்துக்கள்

Thuva சொன்னது…

Thank you

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்