7 அக்டோபர், 2013

நீயாகிய நான் ...

உன்னை நான்
இனி காயப்படுத்தப்போவதில்லை
உன்னைக் காயப்படுத்திவிட்டு
வீடு திரும்பிய போது உன்னைவிட  அதிகம்
காயப்பட்டுக்கிடந்தவன் நான்தான்

குழப்பத்தில் சிதறிப்போய்விட்டேன்
உன்னை அடித்ததில்
எனக்கு தழும்புகள் வந்ததால்

பிறகு புரிந்து கொண்டேன் -நான்
காயப்படுத்திக்கொண்டது உன்னை
தண்டித்துக்கொண்டது என்னை
ஏனென்றால் உண்மையில்
நீ என்பது நான்தான்

நியூட்டனின் விதிக்குள்
ஒரு ஆன்மிகம் இழையோடியதை
உன்னால் படித்துக்கொண்டேன்

நான் உனக்கு  செய்தது எல்லாம்
எனக்கே வந்துசேர்ந்தது
நான் எனக்கே செய்தது ஆனது
ஏனென்றால் உண்மையில்
நீ என்பது நான்தான்
அதைப் போலத்தான்
நான் என்பதும் நீதான்

என் மீது கற்கள் வீசினால்
உன் மீதும் கற்கள் வீசப்படும்
என் மீது பூக்கள்  தூவினால்        
உன் மீதும் பூக்கள் தூவப்படும்
என்னை நீ ஆசிர்வதித்தால்
நீயும் ஆசிர்வதிக்கப்படுவாய்

நீ எதைக் கொடுக்கிறாயோ
அது உன்னிடம் இருக்கும்
எவ்வளவு கொடுக்கிறாயோ
அவ்வளவு உன்னிடம் இருக்கும்

அன்பைக் குறைவாக வழங்கினால்
உன்னிடம் குறைவாக இருக்கும்
நிறைவாக வழங்கினால்
உன்னிடம் நிறைய இருக்கும்
கொடுக்கக் கொடுக்க
உன்னிடம் கூடிக்கொண்டேபோகும்

நான் சேமித்ததை எல்லாம்
நான் இழந்துவிட்டேன்
நான் கொடுத்தது எல்லாம்
எனதே ஆகிவிட்டது

எதையும் சேமித்து விடாதே
கொடுத்து விடு
உன்னிடம் இருப்பதை
என்னிடம் கொடுத்துவிடு -அது
உன்னிடம் தான் இருக்கும்

ஏனென்றால் உண்மையில்
நான் என்பதும் நீதான்

கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்