21 ஆகஸ்ட், 2021

யதார்தா!

அவனின் கோவமும் ஒருவித அழகு தான் என் மேல் காட்டாதவரை,இரசனையில் இனிக்கிறது அனுபவத்தில் கசக்கிறது!

என் சகாயன்

இன்று வரை தெரியவில்லை நாம் ஏன் இந்த நாட்களில் பேசிக்கொள்ளவில்லை என்று!
எக்காரணமின்றி பிரிதலும் – பின் உணர்ந்து
தோள்  சேர்தலும் நட்பில் மட்டும் தான் சாத்தியமா?
பிரிவு தான் புரிதலின் ஆழத்தை அளக்குமா?
நட்பு அன்பின் ஆழத்தை அளக்காதா?

கடந்து வந்த நட்பில்
பிரிவு  குறுகியதாகவே தோன்றவில்லை!
நீதான் என் உயிரினும் மேலான
ப்ரியன் என்றல்லவோ இருந்தேன்!

உன் நீண்ட மௌனம்
உன் பிரிவை எனக்குச் சொல்லும்
உன் நீண்ட மௌனம்
உன் பிரிவால் எனை வாட்டும்!
அன்று என்ன சொன்னேன் என்று நீ ஏன் விட்டுப் போனாய்
என் தோழமை மறந்து சென்றாய்!


கடல்கள் நமை பிரித்தாலும்
வானம் நமை பிரித்தாலும்
இயற்கையும் சூழ்நிலையும் பிரித்தாலும்
நம் எண்ணங்கள் ஒன்றாகி
அதில் பிரிவேது தோழா
நாம் எங்கிருந்த போதும்
நம் நட்பில் பிரிவேது
இது சாத்தியமா?

6 ஜூலை, 2021

நட்சத்திர உலகின் தேவதை அவள்!

நட்சத்திர உலகின் தேவதை அவள்!
தேவலோக இளவரசனை தவமின்றி ஈன்றவளவள்!
அவள் சுவாசித்த காற்று தன்னை வேறு யாரும் சுவாசிக்க கூடாதென்று
போராட்டம் செய்து தான் இத்தனயனை தரணியில் தந்திருப்பாளோ!
அவளின் குணத்தை அவனில் காண்கின்றேன்!
சிறந்த தாயாய் இருக்கிறாள் சிறந்த மனைவியாகவும் இருப்பாள் சிறந்த மகளாகவும் இருந்து தான் இருப்பாள்!
புகைப்பட விளக்கத்தில் மகாராணி ஆக பார்க்கின்றேன்!
நேரில் பார்க்கவும் தான் ஆசைப்படுகின்றேன்!
இனிமையாக அழைக்கிறாள் "தம்பி தம்பி" என்று அந்த வசீகரத்தையே அவனுக்கும் அளித்து தான் இருக்கிறாள்.
குரலில் மட்டும் அல்ல அனைத்திலும் தான்!
முகம் காணா பேதை தான் அவள் நடத்தைகளில் வரைந்துவிட்டாள் அவளின் கடாட்ச்சங்களை என் நெஞ்சில் கல்வெட்டுகளாகவே!
என்னை நீங்கள் அறிந்து இருக்கவில்லை
அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் தான் இல்லை!
எங்கும் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் தான்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா..!
நீண்ட ஆயுள் வேண்டும் என்றும் கடவுள் கூட வருவார்!

4 பிப்ரவரி, 2017

துறவறம்....

மனம் திறந்து கதறி அழ வேண்டும்.எல்லா வலிகளையும் தாங்கிக்கொள்ள முடியும் என்ற அகங்காரம் எங்கே தான் சென்றதோ! முடியவில்லை கண்களில் கண்ணீரைத் தேக்கிவைக்க..!

நெஞ்சத்து ஈரங்கள் வற்றிப்போனது நிம்மதியாக மூச்சை விட முடியாமல் சோகங்கள் சூழ்ந்து கொண்டு ஆட்சி செய்யும் நேரம்!

மரணத் தூதும் பயண அழைப்பு விட்டது
தொட்ட பாவங்கள் சேர்த்து வைத்த சோகங்கள் எல்லாம் மறந்து
புதிதாய் தொடர்ந்தது பூவுலக துறவறம்...
நிம்மதியை தேடி

24 ஜனவரி, 2017

இந்த உலகம்....

பெற்றது யாரென்று
தெரியவில்லை - இனி
எப்படி வாழ்வது
புரியவில்லை

யோசிக்காமல் என்னை
பெற்றுவிட்டாள் - அன்னை
யாசிக்கும் கும்பலிடம்
விற்று விட்டாள்

தெருவிலே கையேந்த
விட்டு விட்டாய் - என்னை
கருவிலே கொல்லாமல் ஏன்
விட்டு விட்டாய் ?

வளர்க்க முடிந்தால் மட்டும்
பிள்ளை பெறுங்கள் - அன்றி
எல்லாவற்றையும் அடக்கி கொண்டு
சும்மா இருங்கள் .

பணக்காரராய் எல்லோரும்
பிறத்தல் வேண்டும் - அன்றி
பசிக்காத வயிறாவது
இருத்தல் வேண்டும் .

27 நவம்பர், 2016

எங்கிருந்து வந்தாய் பகுதி - 2

அவனிடம் அந்த முகவரி பற்றி ஆராய மனம் ஏவியது.எனின் அறிமுக மற்றவனிடம் வீண் கதை ஏன் என்றும் மனம் சொல்லியது.என் ஊர் பக்கம் தான் என்று சொல்லவே அவன் "அப்ப சரி உங்க கூடவே வரலாம் என்றுரைத்தான்" என்னைப் பேசவே விடாமல்..!

அந்த நிமிசம் கழிந்த நினைவுகள் என் நினைவில் அலையாய் எழுந்தன!
கடந்த காலத்தில் சோகம் என்ற சொல்லை விரும்பி ஏற்ற நாட்களை எண்ணும் அளவிற்கு சிறகடித்து திரிந்தவள் நான்..இவனைப் போலவே பேசும் யாரையும் சரியாக பேசவே விடமாட்டேன்..சுட்டியாய் இருந்தேன்!இன்று என்னை நானே தேடிப் பார்க்கின்றேன்.நான் என்னுள் நானே சிரித்துக்கிறேன்...

என் புத்தகத்தில் மூடிய பக்கங்கள் எல்லாம் மீள தட்டினேன் தொலைந்த நினைவுகளைத்தேடி.

என் குடும்பம் அது அப்பா அம்மா அக்கா நான் என்று அழகாய் கிறுக்கிய ஓவியம்..எந்தக் குறையும் இன்றி எதிர்காலம் நம் கையில் என்று நிகழ்காலத்தை கழித்த நாட்களை இன்றும் மறக்க முடியவில்லை.வசதிக்கோ வாழ்வுக்கோ குறையில்லை.

அந்த நாள் சிறு தயக்கம் என் கல்லூரியின் முதல் நாள் ragging senior என்ற பயத்துடன் உள்ளே சென்றேன்."ஏய் நில்லு" என்று ஒரு சத்தம் திடுக்கிட்டு திரும்பிப்பார்தேன்."இங்க வா காலேஜ்க்கு புதுசா" என்றான் அந்த நொடி அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்க தைரியம் இன்றி தலையை மட்டும் மேல் கீழ் ஆட்டினேன்.

சரி உன் பெயர் என்ன எந்த department எந்த ஊரு என்டு listஆ கேள்வி கேட்டான்.என் பேரு மித்ரா - Computer Science Engineering சொந்த ஊரு ஏர்காடு.அவன் சொன்னான் என் ஊர்ல இருந்து இருக்கா என் கண்ணில படாமல் இருந்து இருக்கியே சரி இப்போ என் departmentல join பண்ணி இருக்க so daily கண்ணில பட்டுத்தானே ஆகணும் "சரி சரி" என்று சிரிச்சான்.

அவன்ட பேச்சும் styleம் எனக்கு அந்த நேரம் எரிச்சலாக இருக்கவே...சில விசயங்களை பொறுத்துப் போகணும் என்று அம்மா எப்பவுமே சொல்லுவாங்க.So this mithu மனதைக் கட்டுப்படுத்திடா!

அந்த நேரம் "கேஷவ்" என்று அவனை யாரோ அழைத்தாங்க! "இருடா வாறேன்" என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

நானும் ஒரு வழியா ஒரு தொல்லையை சமாளிச்சாச்சு என்டு என் department பக்கம் போக அதே கேஷவ் வாசலில நின்றான் மறுபடியும் இவனா என்று என்னுள் புலம்பியபடி அவனைக் கடந்தேன் ஆனால் அவன் என்னைக் கண்டுக்கவே இல்லை தெரியுமா?

ஒரு குழப்பம் அங்க அப்படி பேசினான் இங்க யாரோ போல இருக்கானே என்று தான்.

(தொடரும்)

20 நவம்பர், 2016

அழியாத சோகம்

காலம் முழுதும் சேர்ந்திருக்கவே ஆசை கொண்டேன்.
உன் நிழலாக உனைத் தொடர்ந்தேன்.
நீ இமை மூடும் வரை காத்திருந்தேன்.
நீ சுவாசித்த காற்றிலும் கலந்திருந்தேன்.
நீ உறங்கினாலும் உன் கனவாக விழித்திருந்தேன்.
உன் வாசத்துடன் இணைந்து இருந்தேன் ஒரு மலராக..
நீ என்னை வெறுத்தாலும் உனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் பிணமாக -கல்லறையில்

13 நவம்பர், 2013

முயலாய் முயன்றோம்

ஆளே கிடைக்காமல் 
ஆமையை அழைத்தது போட்டிக்கு
அறவே மறுத்தாலும் 
அடம்பிடித்து இழுத்தது முயல் 

ஆயத்தமானது 
ஆமையும் போட்டிக்கு 
ஆரம்பமானது 
அன்றைய போட்டி

முண்டியடித்துக்கொண்டு
முயல் பாய்ந்தோடியது

அரக்கி அரக்கியே
ஆமை நகர்ந்தது

ஆமை வெல்வது
அசாத்தியமானது - ஆனால்
அதுதான் சாத்தியமானது

முயல் தோற்றது
ஏற்றுக்கொள்ள முடியாது - ஆனால்
அதுதான் நிஜம்

போட்டி என்றோ முடிந்தாலும்
பேட்டி இன்றும் தொடர்கிறது

கேள்விகள்
வேள்விகளாய் எரிகின்றன

எப்படி
ஆமைக்கு சாத்தியமானது
எப்படி
முயலுக்கு அசாத்தியமானது

ஆமைக்கு
அசுர வேகம் கிடைத்ததா ?
அல்லது - முயலின்
அசமந்தபோக்கு
அசந்து தூங்க வைத்ததா ?

முயலாய் முயன்று
முண்டியடித்துக்கொண்டோடி
ஆமையிடம் தோற்று
அடங்கிக்கிடக்கிறோம் நாமும்
விடைதெரியாத வினாக்களுடன் ............


12 நவம்பர், 2013

கற்பிழந்த கண்ணகியின் கண்ணீர் வாக்குமூலம்

பாரதி சொன்ன 
புதுமைப் பெண்ணாக 
புத்வேகத்துடன் 
புறப்பட்டு வந்தவள் நான்தான்

கலிகாலத்தில் - ஒரு 
கண்ணகியாக வாழ 
கங்கணம் கட்டிக்கொண்டு 
கம்பீரமாய் நின்றவள் நான்தான்

சீதையாய்
சிறைபிடிக்கப்பட்டேன் - ஆனால்
சீதையாய்
சிறை யெடுக்கப்படவில்லை

சிறைப்பட்டும்
சிதைபடாத சீதையல்ல நான்
சிறைக்குள்ளே
சிதைபட்ட பேதை நான்

வெளியுலகிற்கு
வெளிச்சம் போட்டு
வெட்கி போகாமல்
வெள்ளேந்தியாயிருந்தேன்

கண்ணகிகள்
கற்பிழக்கும்
கட்டாயக் காலம்
கட்டவிழ்த்து விடப்பட்டது

சீதைகள்
சீரழிய வேண்டிய
சிக்கலுக்குள்
சிக்கிக்கொண்டார்கள்

வலிகள் நிறைந்த
வலுவான வாழ்க்கைக்குள்
வலிந்து தள்ளும்
வழிகள் வகுக்கப்பட்டன

வழிகள் இல்லாததால்
வலுவும் இல்லாத நான்
வலிந்து தள்ளப்பட்டேன்
வசப்படுத்தும் வக்கிரத்திற்குள்

சூழ்நிலைகள்
சூழ்ந்துகொண்டு சூறையாடும்
சூழ்ச்சிகள் சூடுபிடித்ததால்
சூல் வர்த்தகம் -என்
சூட்சமமானது

எண் சாண் உடம்புக்கு
ஒரு சாண் தலை பிரதானம் -எம்
ஒரு சாண் வயிற்றுக்கு
எண் சாண்உடம்பே பிரதானமானது

நாயங்கள்
படுத்து கொண்டதால்
நானும்
படுத்து கொண்டேன்

எங்கள்
வயிற்று பசிக்கு
விருந்திடுவதற்கு
நான் பலருக்கு விருந்தானேன்

எங்களை தாங்க
யாருமில்லை என்பதால்
நான் பலரை தாங்கும் நிலை

எங்களுக்கு துணை
யாருமில்லை என்பதால்
நான்தனியாக தூங்குவதில்லை

இராமனின்
அக்கினி பிரவேச ஆணை
அர்த்தமுள்ளதாகும்
இனி வரும் காலமெல்லாம்

கவலை தீர்க்க
கண்ணீர் இல்லை என்னிடம்
கருணை இல்லை கடவுளிடமும்

அழுது அழுது
அழகை குறைக்க முடியாது
அடுத்த வேலை அழைப்பதால்
அவசரமாய் போய்வருகிறேன்

26 அக்டோபர், 2013

அச்சம்

பெண்களின் பலம் 
ஆண்மீது கொள்ளும் அச்சம் 
ஆண்களின் பலவீனம் 
பெண்மீது கொள்ளும் அச்சம் 

பெண்களின் 
ஆயுதம் அச்சம் 
ஆண்களின் 
ஆயுதம் அதிகாரம் 

இதுவே 
கலாச்சாரத்தில் கண்ணியமாகவும் 
காப்பியங்களில் அங்கமாகவும் 
காலந்தோறும் போற்றப்பட்டது 

இன்றைய காலத்தில் 
அச்சமெனும் ஆயுதத்தை 
தூக்கிஎறிந்துவிட்டு 
அதிகாரமெனும் ஆயுதத்தை ஏ 
ந்திக்கொண்டது பெண்னினம் 

அதிகாரம் என்ற ஆயுதத்தை 
இழந்ததினால் அச்சத்திற்குள் 
அடங்கிக்கொண்டது ஆண்ணினம் 

தன் தாய் தந்தைக்கு 
உணவளிக்க அச்சம் 
தன் தம்பி தங்கைக்கு 
உதவி செய்ய அச்சம் - இது 
ஆணினத்திற்கு மட்டுமல்ல 
பெண்னினத்திற்கும் வெட்கம் 

தான் உழைத்தாலும் 
தன் தேவைக்கே 
தன் மனைவியிடம் 
கெஞ்சும் துர்ப்பாக்கிய நிலை சிலஆண்களுக்கு 

மனைவிசொல் மந்திரமானது 
எல்லாம் சக்திமயம் ஆனதால் 
சிவமயமும் பயமயமாகியது 

இலச்சம் இருந்தாலும் 
இலச்சணம் இருந்தாலும் 
அச்சம் இல்லையெனில் அவள் பெண்ணில்லை 

அழகு இருந்தாலும் 
அறிவு இருந்தாலும் 
அடுப்பெரிக்க தெரியாதவள் பெண்ணில்லை 

அச்சமுள்ள பெண் 
உச்சத்தில் வைக்கப்படுவாள் 
அச்சமிலா பெண் 
எச்சத்திற்கு சமம் 

பெண்மையின் மென்மையும் 
பெண்மையின் மேன்மையும் 
அச்சத்தின் தன்மையிலே 
தங்கியிருக்கிறது 

கலாச்சாரத்தின் அச்சாணியே 
பெண்மையின் அச்சம்தான் 

பெண்மை அச்சத்தை இழக்கும்போது 
கலாச்சாரம் முட்டிமோதி உடைந்து போகிறது 

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்